சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்: மாடுகளை அலங்கரித்து, பொங்கல், புதுக்கரும்பு வழங்கி வழிபட்ட மக்கள்

மாட்டுப் பொங்கலையொட்டி வால்டாக்ஸ் சாலையில் மாடுகளுக்கு பூஜை செய்து பண்டிகையை கொண்டாடும் குடும்பத்தினர்.படம்: பு.க.பிரவீன்
மாட்டுப் பொங்கலையொட்டி வால்டாக்ஸ் சாலையில் மாடுகளுக்கு பூஜை செய்து பண்டிகையை கொண்டாடும் குடும்பத்தினர்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் நேற்றுகோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் மாடுகளை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கல், புதுக்கரும்பு, புற்கள் போன்றவற்றை உணவாக வழங்கி வழிபட்டனர்.

இயற்கையோடு இணைந்து கொட்டாடப்படும் பொங்கல் திருநாளின் 3-ம் நாளான நேற்று உழவர்களுக்கும், சுமை தூக்குவோருக்கும் உதவிடும் மாடுகளின் உழைப்பை அங்கீகரித்து, அவற்றுக்கு நன்றி செலுத்த மாட்டுப் பொங்கல் விழாவாக சென்னையில் கொண்டாடப்பட்டது. குறிப்பாககூவம், அடையாறு, பக்கிங்ஹாம்கால்வாய் ஓரங்களில் அதிகஅளவில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி அதிக அளவில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான மாடுகளை நேற்று குளிப்பாட்டி தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணங்களை பூசினர். புதுக் கயிறுகள், கழுத்தில் மணிகள், மாவிலை மாலைகள், பூ மாலைகள் போன்றவற்றை அணிவித்தனர். அவற்றின் நெற்றியில் திலகமிட்டு அலங்கரித்தனர். பின்னர் கற்பூரம் ஏற்றி மாடுகளை வணங்கினர். அம்மாடுகளுக்கு பொங்கல், வடை, புதுக்கரும்பு, புற்கள் போன்றவற்றை உணவாக அளித்து நன்றி செலுத்தினர்.

மாலையில், குடும்பத்தினர் அனைவரும் புத்தாடைகள் அணிந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று மகிழ்ந்தனர். வால்டாக்ஸ் பகுதியிலும் வளர்க்கப்படும் மாடுகளை கோயில்களுக்கு அழைத்துச் சென்று இறைவனை வணங்கினர்.

இதேபோன்று சென்னையில்பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கலையொட்டி மாடுகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனால் சென்னையில் பல்வேறுஇடங்களில் நேற்று மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in