Published : 16 Jan 2022 08:12 AM
Last Updated : 16 Jan 2022 08:12 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 பணியாளர்களுக்கு கரோனா தொற்று

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களைச் சேர்ந்த 2,382 வன விலங்குகள் வனச் சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது பூங்காவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே பூங்கா பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 76 பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பூங்காவை 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரைமூட பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு நிலைமையைப் பொறுத்து, பூங்காவைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கிண்டிசிறுவர் பூங்காவிலும் பணியாளர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்குயாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருப்பதால், கிண்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண் சிங்கம் உயிரிழப்பு

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் 5 வயதான விஷ்ணு என்ற ஆண் சிங்கம் நேற்று திடீரென உயிரிழந்தது. உணவு குழாயில் ஏற்பட்ட முறிவு காரணமாகவும் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாகவும் சிங்கம் உயிரிழந்ததாகத் தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x