

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு அலங்காநல்லூர் இளைஞர் ஒருவர் தொடர்ந்து 3-வது ஆண்டாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஏ2 பால் தரும் காங்கேயம் நாட்டு பசு மாடு வழங்கினார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்துதான் முதல் எதிர்ப்பு குரல் ஒலித்தது. அங்கிருந்து ஆரம்பித்த போராட்டம் பல இடங்களிலும் பரவியதை அடுத்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி அரசு சட்டம் இயற்றியது.
அதன்பின் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் பொறியியல் படித்த இளைஞரான அந்த ஊரைச் சேர்ந்த பொன்குமார் கலந்து கொண்டார். அன்று முதல் அவர் ஜல்லிக்கட்டு ஆர்வலராகவும், இந்த போட்டியில் பெரிய வணிகப் பரிசுகளை தவிர்த்து நாட்டு மாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இத்துடன் நிற்காமல் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கு நாட்டு பசு மாடு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக சிறந்த காளைக்கு இவர் பசு மாடு வழங்க விருந்த நிலையில் சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அதனால், சிறந்த இரண்டாவது காளை உரிமையாளரான மதுரை மேலமடையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு இவரது நாட்டின பசு மாடு வழங்கப்பட்டது. இந்த பசு மாடு ஏ2 வகை பால் தரும் காங்கேயம் நாட்டினத்தை சேர்ந்தது.
இது குறித்து பொன்குமார் கூறியது:
நாட்டினப் பசு மாடு கன்றுடன் சேர்த்து வழங்கியுள்ளேன். இந்த பசு மாடு ரூ.1 லட்சம் மதிப்புள்ளது. நாட்டின காளைகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தேன். அதற்காகவே நாட்டின பசு மாடுகளை விலைக்கு வாங்கி பரிசாக வழங்கி வந்தேன். தற்போது நாட்டின காளைகளை மட்டுமே களம் இறக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு நிறைவேறியுள்ளது என்றார்.