

விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராவேன் என போலீஸில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் நேற்று கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. வில்லிபுத்தூரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரது வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஒப்படைத்தார். அதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 13-ம் தேதி வெளியே வந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று கடிதம் தாக்கல் செய்தார்.