

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை நடக்கவுள்ளது. கும்பாபிஷேக நாளன்று அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் முத்திரை வெளியிடப்படவுள்ளது.
கபாலீஸ்வர் கோயில் இந்தியாவின் மிகப் பழமையான சைவத் தலமாகும். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலை புனரமைக்கும் பணிகள், யாக சாலைகள் அமைப்பது, பஞ்சவர்ண பூச்சு, வெள்ளித்தகடு போர்த்துவது, சுவாமி சிலைக்கு தங்க நாகம் அணிவிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளன. நாளை காலை 8.45 முதல் 9.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
நாளை அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன. பின்னர் காலை 7.45 மணிக்கு கலச புறப்பாடு நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து 19 விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கவுள்ளன.
கும்பாபிஷேகத்தை காண பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் திரளக்கூடும் என்பதால், பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாகன நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
சிறப்பு அஞ்சல் முத்திரை
மயிலாப்பூர் அஞ்சல் நிலையத்தில் கும்பாபி ஷேகம் நாளன்று காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை பரிமாறப்படும் கடிதங்களில் மயிலாப்பூர் கோயிலின் முத்திரை பதிக்கப்படும் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறினார்.