Published : 16 Jan 2022 10:15 AM
Last Updated : 16 Jan 2022 10:15 AM

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்

தஞ்சாவூர்

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளதாக புவிசார் குறியீடு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட் டார்னி சங்கத் தலைவருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ‘கும்பகோணம் வெற்றிலை'க்கு புவிசார் குறியீடு கேட்டு, அதற்கான விண்ணப்பம் சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் ஜன.13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது கும்பகோணம் வெற்றிலை. திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இந்த வெற்றிலை விளைவிக்கப்பட்டு, உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பூம்புகாருக்கு அருகே ராதாநல்லூரில் உள்ள சிவாலயத்தின் கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகள் ஆகியவற்றை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கி.பி 10-முதல் 14-ம் நூற்றாண்டு காலத்திலிருந்தே காவிரிப் படுகையில் கும்பகோணம் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தோவாளை மாணிக்க மாலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்படும் ‘தோவாளை மாணிக்க மாலை’க்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி கைவினைக் கலைஞர்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x