

சென்னை: திருச்சி மாவட்டத்தின் சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் பலியானார்.
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 486 காளைகளும், 5 சுற்றுகளில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.
இந்தப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை 12 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் வென்றார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 9 காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. யாராலும் அடக்க முடியாத காளைக்கு சிறந்த காளைக்கான பரிசும் வழங்கப்பட்டது.
காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்: இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், போட்டித் தொடங்கி நேரம் செல்ல செல்ல மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காண திரண்டனர்.