Published : 15 Jan 2022 04:37 PM
Last Updated : 15 Jan 2022 04:37 PM

வெளுத்து வாங்கிய மது விற்பனை: கரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் 'விலக்கு' சரியா?

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் உள்ளிட்ட கரோனாவின் உருமாறிய வேரியன்டுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பேருந்துகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத பேருக்கு அனுமதி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட எண்ணற்ற தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழகத்தில் 5300-க்கும் மேற்பட்ட சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசின் நிதி ஆதாரத்தில் டாஸ்மாக் மது விற்பனை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த கடைகளில் வார நாட்களில் சராசரியாக ரூ.100 கோடி வரையிலும், வார இறுதி நாட்களில் நூறு கோடிக்கு அதிகமாக விற்பனையாகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14 அன்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 28,91,959 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மட்டும், 23,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகரிக்கும் விற்பனை: இதே நாளில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 59.65 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 59.28 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 63.87 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

தொடர் விடுமுறை காரணமா? - தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு திருவள்ளுவர் தினம் (ஜனவரி 15), ஞாயிறு முழு ஊரடங்கு (ஜனவரி 16) மற்றும் வள்ளலார் தினமான (ஜனவரி 18) உள்ளிட்ட தொடர் விடுமுறைகளின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் இந்த அளவுக்கு மது விற்பனை அதிகமாகியிருக்கிறது என கூறப்பட்டாலும், பண்டிகை காலங்களில் தமிழகத்தில் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள மது விற்பனை புள்ளி விவரங்கள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரத்துடன் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து விமர்சனம் வந்ததைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்து டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை, பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.244 கோடி மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.113 கோடிக்கும், தீபாவளி பண்டிகை அன்று ரூ.131 கோடிக்கும் என 2 நாட்களில் மட்டும் ரூ.244 கோடிக்கு மது விற்பனை நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

உயர் நீதிமன்ற வழக்குகள்: கரோனா காலக் கட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளைத் திறக்க தடை விதித்தபோது, அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவு பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இதுதொடர்பான மேலும் சில வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளில், டாஸ்மாக் மது விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டது. மேலும், கரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை டாஸ்மாக் கடைகளிலும் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தான் டாஸ்மாக் கடைகளின் முன்பு கட்டைகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. கிருமி நாசினி, தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பின்பற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில்தான் இன்னும் டாஸ்மாக் கடைகளில் தடுப்புகள் இருந்து வருகின்றன.

கரோனா கால டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் நம்மிடம் பேசும்போது, ”புராண காலங்களில் இருந்தே மது விற்பனை இருந்துள்ளது. மது ஒழிப்பு என்பது சாத்தியம் இல்லை. நான் ஆரம்பக் காலம் முதலே மது விற்பனையை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வழக்குகளைத் தாக்கல் செய்தேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் பார்த்தால், அது அரசாங்கத்தை ஆள்பவர்களால் தான் நிறுத்த முடியும். ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, மது உற்பத்தி தொழிற்சாலைகள் அதிமுக, திமுகவைச் சேர்ந்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. எனவே மது விற்பனையை நிறுத்தவது சாத்தியம் இல்லை. ஆனால், மது விற்பனையை நீதிமன்றங்களால் நெறிமுறைப்படுத்த முடியும். வெளிநாட்டில் உள்ள மதுபானங்களுக்கும், தமிழகத்தில் உள்ள மதுபானங்களுக்கும் தரத்தில் வித்தியாசங்கள் உள்ளன. மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மது மீட்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழக அரசால் 4 இடங்களில் மட்டுமே மது மீட்பு மையங்கள் உள்ளன. தனியார் நடத்தும் மது மீட்பு மையங்களில் சிகிச்சையளிக்க அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

கரோனா முதல் அலையின்போது மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மே 7-ஆம் தேதி திறப்பதாக அப்போதைய அதிமுக அறிவித்ததை எதிர்த்து நான் உள்பட பலர் தொடர்ந்த வழக்கில் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த தடையை விலக்கியதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த வழக்கின் காரணமாக தமிழகத்தில் ஒரு 8 நாள்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பெரியசாமி நம்மிடம் கூறும்போது, "தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரி, டாஸ்மாக் மேலாண் இயக்குநரை சந்தித்து முறையீடு செய்தோம். எங்களுக்கு கரோனா முதல் அலையின்போது கையுறை, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால் தற்போது இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். ஆனால், இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் இதுதொடர்பாக எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 25 ஆயிரம் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம். கரோனா தொற்றின் வீரியம் உணர்ந்து கடையை 10 மணிக்கு முன்னதாக 9 மணிக்கே அடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் மற்றும் கரோனா பரவலின் வேகத்தை உணர்ந்து சமூக பொறுப்புடன் தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x