

பெண்களுடன் தவறான தொடர் புக்கு தடையாக இருந்த அவர் களின் கணவர்கள் உட்பட 3 பேர் விஷ ஊசி போட்டு கொலை செய் யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் வசிப்பவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கள் மற்றும் பணம் திருடப்பட்டு விட்டதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 4-ம் தேதி ஸ்டீபன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை யில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி(32), முருகானந்தம்(27), சதீஷ்குமார்(26) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட பாலாஜி, முருகானந்தம் ஆகிய இருவரும் ஏற்கெனவே ஸ்டீபனிடம் வேலை செய்து வந்துள்ளனர். இதனால் ஸ்டீபனிடம் பணப்புழக்கம் அதிகம் இருப்பதை தெரிந்துகொண்டு அவற்றை திருடியுள்ளனர். திருட்டு வழக்கில் கைதான 3 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, திருட்டு மட்டும் அல்லாமல் மேலும் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்கிறோம் என்று அவர்கள் கூறியதை கேட்ட போலீஸார் அதிர்ந்துவிட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது,
“ஸ்டீபன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிவதற்கு தனது மைத்துனர் ஜான் பிலோமினன்தான் காரணம் என நினைத்து அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி, 19-04-2015 அன்று ஜான் பிலோமினனுக்கு ஆயிரம்விளக்கு பகுதியில் வைத்து விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளனர் ஸ்டீபனும் அவரது கூட்டாளிகளும்.
பின்னர், ஸ்டீபன் பல பெண்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். உத்திரமேருரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதற்கு தடையாக இருந்த ஸ்ரீதரை உத்திரமேருரில் வைத்து 17-05-2015 அன்று விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
மடிப்பாக்கத்தை சேர்ந்த ஹென்றி என்பவரின் மனைவியுட னும் ஸ்டீபனுக்கு தவறான தொடர்பு இருந்துள்ளது. இதற்கு தடையாக இருந்த ஹென்றிக்கு 1-01-2015 அன்று விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
3 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஸ்டீபனை யும் கைது செய்து இருக்கிறோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஸ்டீபன் அனுமதியின்றி வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகளும், 5 தோட்டாக்களும், கொலை செய்ய பயன்படுத்திய விஷ ஊசி மருந்து மற்றும் சிரிஞ்ச் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. 3 கொலைகளை செய்துவிட்டு அவற்றை இயற்கை மரணம்போல மாற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.