

சென்னை: இரவில் சாலைப்பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 நவம்பர், டிசம்பர் கனமழையின்போது சென்னை மாநகரம் மட்டுமல்ல தமிழகமே மழைவெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தரைப்பாலங்கள் மூழ்கின. சில இடங்களில் பாலங்கள் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள போக்குவரத்து சாலைகள் மழையில் கடுமையாக பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இதற்கான மராமத்துப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என தமிழக அரசு அப்போது அறிவித்தது.
இதன்படி சென்னை மாநகராட்சியில் 312 கி.மீ. - பிற மாநகராட்சிகள் & நகராட்சிகளில் 1675 கி.மீ. - பேரூராட்சிகளில் 1110 கி.மீ. ஊராட்சிகளில் 650 கி.மீ. தொலைவுகளில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் சென்னையில் சில பகுதிகளிலும் நேற்று இரவு நடைபெற்ற சாலைப்பணிகளை நேரில் ஆய்வுசெய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சரிசெய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். இதன்படி சென்னை மாநகராட்சியில் 312 கி.மீ. - பிற மாநகராட்சிகள் & நகராட்சிகளில் 1675 கி.மீ. - பேரூராட்சிகளில் 1110 கி.மீ. ஊராட்சிகளில் 650 கி.மீ. நீளமுள்ள பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும், மகாலிங்கபுரத்திலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இத்துடன் தனது ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள படங்களின் தொகுப்பு: