

சென்னை: சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் வீட்டின் கேட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு ரஜினி நேரில் வந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அடியெடுத்துவைத்து, 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டவர் ரஜினி. இன்றும் ஒரே சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் பார்த்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்கென்றே அவரது ரசிகர் பட்டாளத்தின் வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் சில சூழ்நிலைகளில் ரசிகர்களை அவர் காணவிரும்பாத நிலையும் ஏற்படுவது உண்டு. அத்தகைய நாட்களில் ரசிகர்கள் 'நம் அதிஷ்டம் அவ்வளவுதான்' என்பதுபோல சோகமாக கலைந்து செல்வதும் வழக்கமாக இருந்தது.
கடந்த டிசம்பரில்கூட அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் போயஸ்கார்டனில் அவரது இல்லத்தின் முன் திரண்டனர். ஆனால் ஏனோ அவர் ரசிகர்களை சந்திக்க மனமின்றி வீட்டுக்குள்ளேயே தனது குடும்பத்தினருடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது ஆரவாரத்துடன் திரண்ட ரசிகர்கள் ரஜினியைக் காணாமல் அயர்வாகக் கலைந்து சென்றனர்.
ஆனால், இம்முறை இன்றைய பொங்கல் திருநாளில், தனது வீட்டின் ரசிகர்கள் குவிந்துவிட்டனர் என்பதை அறிந்த ரஜினி வீட்டை வெளியே வந்தார். வீட்டின் முன்பகுதியில் நுழைவாயில்கேட் அருகே இருந்தபடி வெளியே காத்திருக்கும் ரசிகர்களை அவர் சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரவசத்தை இன்று அளித்துள்ளது.
அவர் வெளியே வந்ததைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ''தலைவா தலைவா'' என்று கைகளை உயர்த்தி துள்ளலுடன் கோஷமிட்டனர். இதனைக் கண்ட ரஜினியும் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களைப் பார்த்து ஆரவாரத்துடன் கையசைத்தார். பின்னர் அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தனது அன்பு ரசிகர்களுக்கு அவர் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.