

சென்னை: நம்மைக் காப்பாற்றிக்கொள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிங்க என்று நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து செய்தியாக ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் விழாவாக தை முதல்நாளாம் இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
உள்ளத்தில் கரோனா அச்சம் ஒருபக்கம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும் காளையை அடக்குவது போல கரோனாவை அடக்கிக் காட்டுவோம் என்று உற்சாகம் இழக்காமல் அரசு விதித்த கரோனா கட்டுப்பாடுகளுடன் தங்கள் பொங்கல் பண்டிகைகையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பொங்கல் விழா முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிப் பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துக்களை கரோனா செய்தியுடன் இணைத்துக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்.
இந்த கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது.
அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.