Published : 14 Jan 2022 05:18 AM
Last Updated : 14 Jan 2022 05:18 AM

கோயில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்; 97,400 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை

திருமண உதவித்திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி மற்றும் கோயில் பூசாரிகளுக்கான உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூகநலத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டம் என்பது பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும் பெண்களின் திருமணத்துக்காக பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் மாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழை பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும்தம்பதியர் ஆகியோர் பயன்பெறும்வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பட்டம், பட்டயப் படிப்பு படித்த53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள் என மொத்தம் ரூ.94,700 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த2,900 பயனாளிகளுக்கு திருமணநிதியுதவி வழங்கும் திட்டத்தைதொடங்கிவைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித்தொகையுடன், 8 கிராம்தங்க நாணயத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம்

இந்துசமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணியாற்றி 60 வயதைக்கடந்து ஓய்வுபெற்ற கிராமக்கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்துரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 1,804 கிராமப்புற பூசாரிகள் பயன் பெறுகின்றனர். அதேபோல், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்யப்பிரபந்தம் பாடுவோர் மற்றும்அர்ச்சகர்களுக்கான ஓய்வூதியம் ரூ1,000-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 100 ஓய்வூதியர்கள் பயன்பெறுகின்றனர்.

இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x