

தமிழகத்தில் மீனவர்கள் பரவலாக உள்ள மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகள் உள்ளது. இருந்தும் இம்மாவட்டத்தில் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மீனவப் பிரதிநிதிகள் யாரும் இப்போது இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று கடந்த 20 ஆண்டுகளில் 170-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். கடலில் மாயமாகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மீனவர்களின் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுகவில் இல்லை
சட்டப்பேரவையில் மீனவர் நலன் சார்ந்து குரல் கொடுக்க மீனவ வேட்பாளரை பிரதான கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மீனவர்கள் யாரும் இடம்பெறவில்லை.
குளச்சல், கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் மையப்புள்ளியாக மீனவர்கள் உள்ளனர். ஆனால் அதிமுக சார்பிலும் மீனவர்களுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திமுகவில் எதிர்பார்ப்பு
திமுகவில் மீனவ வேட்பாளர் அறிவிக்கக்கூடும் என்று மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை மீனவர் வேட்பாளருக்கு ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திமுக வேட்பாளர் பட்டியலில் மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.