

பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அரசுப் பேருந்துகள், ரயில்களில் நேற்றும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படு கிறது. பொதுவாக வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களால் நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவர். அதன்படி, இந்த ஆண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்தனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களின் வசதிக்காக கடந்த 3 நாட்களாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சிறப்பு ரயில்கள்
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 10 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலை மோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருந்த விரைவு ரயில்களில் நெரிசல் அதிகமாக இருந்தது.
சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. போக்குவரத்து அதிகாரிகள், பேருந்துகளை ஒழுங்குபடுத்தி இயங்கினர். கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பேருந்துகள் தவிர, கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் மக்கள் பயணித்தனர். இதனால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமைச்சர் ஆய்வு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போக்குவரத்து பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் தேவைக்கேற்ப தேவையான வழித்தடங்களில் விடிய, விடிய பேருந்துகளை இயக்குகிறோம். சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்து திரும்பும் மக்களின் வசதிக்காக வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் 16,700-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளோம்’’ என்றனர்.
விரைவு மற்றும் சிறப்பு ரயில்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1.20 லட்சம் பேர் பயணம் செய்ததாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு உட்பட சில இடங்களில் இருந்து ஆம்னி பேருந்து களிலும், சொந்த வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானோர் நேற்று புறப் பட்டு சென்றனர். அதன்படி, கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பொங்கலையொட்டி குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தாடைகள் எடுப்பதற்காக துணிக்கடை களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஏராளமானோர் நேற்று காலை முதலே குவிந்திருந்தனர்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்த சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை. அதேநேரத்தில் குற்றச் செயல்களை தடுக்க ஏராளமான போலீஸார் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோயம்பேடு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்புகள், மஞ்சள் கொத்துகள், வாழைப்பழ தார்கள் வந்திறங்கிய வண்ணம் இருந்தது. சில்லறை வியாபாரிகள் போட்டி போட்டு அவற்றை வாங்கிச் சென்றனர். அதனால் சந்தை வளாகத்திலும், வெளியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதேபோல தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் பொங்கல் விற்பனை களைகட்டியது. விழுப்புரம், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, கன் னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் பானை, மஞ்சள், கரும்பு, பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் ஆர்வத் துடன் இவற்றை வாங்கிச் சென்றனர்.