Published : 18 Apr 2016 08:31 AM
Last Updated : 18 Apr 2016 08:31 AM

ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு பிறகு திடீர் திருப்பம்: சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் - ஸ்ரீபிரியா தேன்மொழிக்கு பதிலாக சி.பவானி போட்டி

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீபிரியா தேன்மொழிக்கு பதிலாக சி.பவானி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. சோழவந்தான் (தனி) தொகுதிக்கு டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை ஆதரித்து சோழவந்தான் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், அங்கு ஸ்ரீபிரியா தேன்மொழிக்கு பதிலாக சி.பவானி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் (தனி) தொகுதி வேட்பாளராக ஸ்ரீபிரியா தேன்மொழி அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தேர்தலில் போட்டியிட முன்வராததால், அவருக்கு பதிலாக ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னக்கருப்பனின் மனைவி சி.பவானி வேட்பாளராக போட்டியிடுவார் ’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘ஸ்ரீபிரியா தேன்மொழி அரசு டாக்டராக உள்ளார். தேர்தலில் போட்டியிடுபவர், அரசுப் பணிகளில் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. தனது பணியை ராஜினாமா செய்ய விரும்பாத ஸ்ரீபிரியா, தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. தனது ராஜினாமா கடிதத்தை சுகாதாரத்துறை ஏற்கவில்லை என்றும், இதனால் போட்டியிட விரும்பவில்லை என்றும் திமுக தலைமையிடம் ஸ்ரீபிரியா கூறி யுள்ளார். இதையடுத்தே, சோழவந் தான் தொகுதியின் புதிய வேட்பாளராக சி.பவானியை திமுக தலைமை அறிவித்துள்ளது’’ என தெரிவித்தனர்.

6 மாதம் முன்பே ராஜினாமா

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியும், அரசு டாக்டராக பணியாற்றியவர்தான். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்காக, 6 மாதத்துக்கு முன்பே அவர் தனது பதவியை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜ்குமார், போட்டியிட விருப்பமில்லை என்று ஒதுங்கினார். அவருக்கு பதிலாக ராமச்சந்திரன், புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட் டார். அதேபோல வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்கு அறிவிக் கப்பட்ட எஸ்.பவானி மாற்றப்பட்டு, அவ ருக்கு பதிலாக என்.ராஜ்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுக்குப் பணம் வழங்க மறுத்ததாக குற்றச்சாட்டு

இதனிடையே, தேர்தல் செலவுக்குப் பணம் வழங்க மறுத்ததால் சோழவந்தான் தனி தொகுதி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ஸ்ரீபிரியா தரப்பில் கேட்டபோது, 'அரசு டாக்டர் பணியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பப்பட்டது. அதை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அப்படியே கடிதத்தை ஏற்றாலும், தடையில்லா சான்று வழங்குவதற்கு 15 நாட்களுக்கு மேலாகும் என்றும் தெரிவித்தனர். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால், தேர்தலில் போட்டியிட முடியாமலும், அரசு பணியில் தொடர முடியாத நிலையும் ஏற்படும். இதை தலைமையிடம் தெரிவித்தோம். அதையேற்று புதிய வேட்பாளரை தலைமை அறிவித்துள்ளது. வேறு காரணங்கள் இல்லை எனத் தெரிவித்தனர்' என்றனர்.

திமுகவினர் தரப்பில் கேட்டபோது, "சோழவந்தானுக்கு பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் வந்தபோது கட்சியினரை அழைத்து வருவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்ய ரூ.10 லட்சம் கேட்கப்பட்டது. அதற்கு கட்சியில் இருந்து தானே தேர்தல் செலவுக்கு பணம் தருவார்கள். அப்படித் தரும்போது செலவு போக மீதிப்பணத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இதனால் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகிகள் சொந்தப் பணத்தை செலவிட்டனர். அதன் பிறகும் ஸ்ரீபிரியா தேர்தல் செலவுக்குப் பணத்தை செலவிடுவதாக இல்லை. இந்த விஷயத்தை மாவட்டச் செயலர் மூலம் தலைமைக்கு தெரியப்படுத்தினோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x