Published : 14 Jan 2022 05:55 AM
Last Updated : 14 Jan 2022 05:55 AM

முதல்வர் ஸ்டாலின் குறித்து ராஜேந்திரபாலாஜி அவதூறு பேச்சு- அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மேற்குமண்டல ஐஜி-யிடம் புகார்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு மண்டலகாவல்துறை தலைவர் சுதாகரிடம் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திரபாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார். மேலும், ‘இது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது. தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும்' என மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திரபாலாஜி பேசினார். தொண்டாமுத்தூர் வரும்போது மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இந்து-முஸ்லிம்மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சொற்களையும் அவர் பயன்படுத்தினார். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு அளித்தபிறகு செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறும்போது, "மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசியுள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளேன். என் புகாரைபெற்றுக்கொண்ட ஐஜி, காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் புகாரை பதிவு செய்யுமாறு தெரிவித்தார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x