Published : 21 Apr 2016 08:23 AM
Last Updated : 21 Apr 2016 08:23 AM

வேளச்சேரியை கைப்பற்ற வேட்பாளர்கள் தீவிரம்: வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

வேளச்சேரி தொகுதியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் அடுத்த தியாகராய நகர் என்று வர்ணிக்கப் படும் வேளச்சேரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் நீலாங்கரை எம்.சி.முனுசாமி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் என 179 வார்டில் நேற்று காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், டீக்கடை, பூக்கடை, மளிகைக்கடை, பழக்கடை என வியாபாரிகளையும், கோயிலுக்கு வரும் பக்தர்களையும் குறி வைத்து முதல்சுற்று வாக்கு சேகரிப்பை நடத்தினார். பொதுமக்களைச் சந்திக்கும்போது, “புள்ளைங்களுக்கு லேப்டாப் வந்துச்சா, சைக்கிள் வந்துச்சா, அம்மா இன்னும் நிறைய செய்வாங்க’ என்று சாமானியர்களை சென்றடைந்த திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

‘தி இந்து’விடம் பேசிய எம்.சி.முனுசாமி, “வேளச்சேரி தொகுதியில் குறை சொல்லும் அளவுக்கு எதுவுமே கெடையாது. மக்கள் நிம்மதியா இருக்காங்க, போகிற இடமெல்லாம் எனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்குது. முதல்வர் நடைமுறைப்படுத்திய சாதனை திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கிறேன்” என்றார்.

இத்தொகுதியின் திமுக வேட்பாளரான நடிகர் வாகை சந்திரசேகர், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தனது அடையாறு வீட்டிலிருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கெல்லாம் தொகுதிக்கு வந்துவிடுகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் பாணியில், மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம் என அத்தனை சங்கத்தினரையும் சந்தித்து தொகுதி பிரச்சினைகளை கேட்கிறார். பெரும்பாலான வாக்காளர்களை அருகில் அழைத்து தானே புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

“சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பெரிதும் பாதிக்கப் பட்டது வேளச்சேரி பகுதிதான். சென்னையின் பள்ளமான பகுதி யான வேளச்சேரியிலிருந்து தண்ணீரை கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நான் செயல்படுத்துவேன்.வேளச்சேரி யில் அரசு பொது மருத்துவமனை கொண்டு வருவேன்” என்கிறார் வாகை சந்திரசேகர்.

பாஜக சார்பில் களமிறங்கியுள்ள டால்பின் தருக்கு ஆதரவாக ஆந்திரம், கர்நாடகம், மாராட்டியம் போன்ற மாநிலங்களிலிருந்து சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள் வேளச்சேரியில் குழுமி வாக்கு சேகரித்து வருகின்றனர். அதனால் அவர் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் ஏதோ ஆன்மீக ஊர்வலம் போல் காட்சியளிக்கிறது.

வேளச்சேரி தொகுதியில் பாமக சார்பில் வினோபா பூபதி வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். வேட்பாளராக தான் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, வேளச்சேரியின் பிரதான பகுதிகளில் முதல்சுற்று வாக்கு சேகரிப்பை முடித்துவிட்ட வினோபா பூபதி, அதிகாரப்பூர்வ வேட்பாளரான நிலையில் நேற்று அடையாறு அருகே ஒரு தனியார் மண்டபத்தில் அடுத்தகட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக தனது கட்சிக்காரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தேமுதிகவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜனும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார். சேலத்தில் விஜயகாந்த் தலைமையில் நடத்தப்பட்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள அவர், நாளை சுதீஷை வைத்து தனது தேர்தல் பணிமனையை திறந்துவைத்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக கூறுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சந்திரசேகரனும் வேளச்சேரி தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆதரவு அமைப்புகள் எங்கே?

திமுக, அதிமுக தரப்பு வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு வரை புற்றீசல்களாய் முளைத்த நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகளும் கட்சிகளும் அக்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தினசரி அறிவித்து வந்தன. ஆனால், சென்னை வேளச்சேரி தொகுதியில், திமுக, அதிமுக வேட்பாளர்கள் செல்கிற இடங்களிலெல்லாம் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கான சுவடுகள் எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி ஏரிக்கரை அருகே மொபைல் சர்வீஸ் ஸ்டோர் வைத்திருக்கும் சிவகுருநாதனிடம் பேசிய போது, “கடந்த 10 ஆண்டுகளில் வேளச்சேரி மிகப்பெரியளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இன்னமும் புறநகர் பகுதிகளைப் போலவே, வேளச்சேரியை நடத்துகிறார்கள். பாதாள சாக்கடை திட்டம், விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலம் என பல்வேறு திட்டங்கள் தொகுதிக்கு அவசியமாகும். முக்கியமாக மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x