

காணும் பொங்கல் தினத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், பொங்கல் விடுமுறையில் கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர்.
கரோனா பரவலால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், கன்னியாகுமரி கடற்கரை, குற்றாலம் அருவி, அணைகள் போன்ற நீர்நிலை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அண்மையில் தடைகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
வழக்கமாக காணும் பொங்கலை கொண்டாட கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவர். இந்த ஆண்டு காணும் பொங்கல் தினமான 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பொங்கல் விடுமுறை நாட்களான இன்றும் நாளையும் நீர்நிலை பகுதிகள், பூங்காக்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 18-ம் தேதி தைப்பூசம் விடுமுறை என்பதால் இடைப்பட்ட நாளான 17-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களிலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
எனவே, விடுமுறை நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று இரவு முதல் கடற்கரைகள், நீர்நிலைகளுக்கு செல்லும் வழிகளை தடுப்புகள் வைத்து அடைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாத, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலில் இருப்பதால் மாநில எல்லைகளில் போலீஸார் குவிக்கப்பட்டு, தீவிர சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. முறையான அனுமதி இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.