Published : 10 Apr 2016 10:51 AM
Last Updated : 10 Apr 2016 10:51 AM

பெரியார், கி.வீரமணி ஆகியோரை அவமதித்ததாக புகார்: முகாந்திரம் இருந்தால் எச்.ராஜா மீது வழக்குப் பதிய உத்தரவு

கடந்த 2015 ஏப்ரலில் தந்தை பெரியார், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோரை அவமதித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருந்தால் மட்டும் தி.நகர் பாஜக வேட்பாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திராவிடர் கழகம் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதையும் சமுதாய விழிப்புணர்வுக்காக அர்ப்பணித்தவர். சமூக நீதி, பெண் கல்விக்காக பாடுபட்டவர். மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடியவர்.

அவரது சமுகப் பணியைப் பாராட்டியுள்ள யுனெஸ்கோ அமைப்பு, தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. பெரியாரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு மத்திய அரசு அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

இதேபோல் தற்போது திராவிடர் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி, தந்தை பெரியாருடன் கூடவே இருந்து சமூக நீதிக்காக பாடுபட்டவர். பெரியாரின் இறப்புக்குப் பிறகு, அவரது கொள்கைகளை கி.வீரமணிதான் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட தலைவர்களை பாஜகவின் தேசியச் செயலாளராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட சிலர் தொடர்ந்து அவமரியாதை செய்து வருகின்றனர். இதன்மூலம் சுயமரியாதையுள்ள அனைத்து தமிழர்களையும் அவமானப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2015 ஏப்ரல் 18-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, ஈ.வெ.ரா. ஒரு தேசத் துரோகி என்றும், விலை மாதர்களோடு கும்மாளம் அடிப்பவர் என்றும் இஷ்டத்துக்கு கீழ்த்தரமாக பேசி அவமதித்துள்ளார். மேலும் கி.வீரமணியையும், ஒரு மோசமான கும்பல் வீரமணிக் கும்பல் என எச்.ராஜா பேசியுள்ளார். மேலும் தந்தை பெரியார் மற்றும் கி.வீரமணி ஆகியோரது புகைப்படங்களை செருப்பால் அடித்து தீ வைக்கும்படி கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ வில் படம் பிடித்து, 2015 ஏப்ரல் 25-ம் தேதி எச்.ராஜா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் செய்தேன். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அதே மாதம் 28-ம் தேதி ரசீது கொடுத்தனர்.

எனவே, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, “இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், மனுதாரர் கொடுத்த புகாரில் குற்றச்சாட் டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டும், எச்,ராஜா மீது வழக்குப்பதிந்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்” என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x