Last Updated : 14 Jan, 2022 06:58 AM

 

Published : 14 Jan 2022 06:58 AM
Last Updated : 14 Jan 2022 06:58 AM

கரோனா பெருந்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் கரும்பு விற்பனை சரிவு: விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை

வேலூர்

பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூர் மார்க்கெட்டுக்கு வந்துள்ள கரும்புகளை வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று மற்றும் இரவு நேர ஊரடங்கால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. பொங்கல் பண்டிகை என்றால் சட்டென நினைவுக்கு வருவது சர்க்கரை பொங்கலும், இனிக்கும் கரும்பும் தான். பொங்கல் பண்டிகை கருத்தில் கொண்டே விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

வேலூர் மார்க்கெட் பகுதிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு லோடு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கரும்புக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளதால் கரும்பு வியாபாரிகள் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லாரிகள் மூலம் கரும்புகளை வேலூர் மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு கரும்பு வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.600 வரை விற்பனையானது. இந்நிலையில், பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்ததால் கரும்பு விளைச்சல் அதிகரித்து தற்போது அதிக அளவிலான கரும்புகள் விற்பனைக்காக வேலூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கரும்பு வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. விலை குறைந் தாலும், கரோனா பெருந்தொற்றால் மக்கள் நடமாட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் கரும்பு கள் விற்பனையாகாததால் விவ சாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வேலூர் கரும்பு வியாபாரி வெங்கடேசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய தாவது, ‘‘வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம், காட்பாடி, அணைக் கட்டு, பள்ளிகொண்டா, ஒடுக்கத் தூர் போன்ற பகுதிகளில் இருந்து கரும்பு லோடுகள் விற்பனைக்காக வேலூர் மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொங்கல் கரும்பு வியாபாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் விலை குறைந்துள்ளது. இருந்தாலும் கரும்புகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. பொருளா தார பின்னடைவு, கரோனா பரவல், இரவு நேர ஊரடங்கு என பல காரணங்களால் கரும்பு வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி 50 லாரிகளில் கரும்பு லோடு கொண்டு வந்துள்ளோம்.

ஒவ்வொரு லாரியிலும் 12 ஆயிரம் கரும்புகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வந்த கரும்பு லாரி லோடில் 1 லாரியில் இருந்து மட்டுமே கரும்பு விற்பனையாகியுள் ளது. இன்னும் 49 லாரிகளில் கரும்புகள் இருப்புள்ளன. பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் வரை தான் கரும்பு விற்பனையாகும். அதன்பிறகு கரும்பு விற்பனையாக வாய்ப்பில்லை. சில்லறை வியா பாரம் கூட நடப்பது சந்தேகம்.

கரும்பு வியாபாரி வெங்கடேஷ்.

இந்நிலையில், டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு களால் வியாபாரிகளுக்கும், எங்களை நம்பி கரும்புகளை அனுப்பி வைத்த கரும்பு விவசாயி களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

வேலூர் மாவட்டத்தில் கரும்பு வியாபாரம் ‘டல்’ அடித்தாலும் காய்கறி, பழங்கள், பூ வியாபாரம் விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது. வேலூர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.50-க்கும், மொச்சை ரூ.60-க்கும், சக்கரவள்ளி கிழங்கு ரூ.40-க்கும், கத்திரிக்காய் ரூ.60, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.10, கருணைக்கிழங்கு ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வாழைக்காய் (ஒன்று) ரூ.5 என விலை உயர்த்தப்பட்டு விற்பனையானது.

அதேபோல, பூக்கள் வரத்தும் குறைந்துள்ளதால் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. வேலூர் பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.700-க்கும், முல்லை ரூ.700, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரையிலும், ரோஜா ரூ.150, துளசி ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட எண்ணிய மக்கள் விலை ஏற்றமடைந்தாலும் வேறுவழியின்றி பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். மாட்டுபொங்கல் பண்டிகை அன்று கால்நடைகளை அலங்காரம் செய்ய மாடுகளுக்கு தேவையான கயிறு, சங்கு, மணி, சலங்கை உள்ளிட்டவைகளின் விற்பனையும் வேலூரில் நேற்று களைகட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x