Published : 13 Jan 2022 06:38 PM
Last Updated : 13 Jan 2022 06:38 PM

தமிழ்ப் பாரம்பரியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுவது நமது கடமை: திருமாவளவன், வேல்முருகன் பொங்கல் வாழ்த்து

தொல். திருமாவளவன், தி.வேல்முருகன் | கோப்புப் படங்கள்.

சென்னை: தமிழகத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விசிக தலைவர் திருமாவளவன்:

தலைமுறை தலைமுறையாய்த் தமிழ்ப்பெருங்குடி மக்கள் கொண்டாடி வரும் அறுவடைத் திருவிழாவான பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உலகமெங்கும் பரந்து வாழும் ஒட்டுமொத்த எம் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், மார்கழியின் இறுதி நாளில் பயனிலாப் பழையன யாவற்றையும் கழித்து, பயனுள்ள புதியன யாவற்றையும் ஏற்கும் தை முதல்நாளில் யாவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா கொடுந்தொற்றின் கடும் பாதிப்புகள் ஒருபுறம், பொருளியல், சாதி-மத வெறுப்பு அரசியல் போன்ற சமூக நெருக்கடிகள் இன்னொருபுறம் எனப் பல்வேறு இடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான இச்சூழலில் இத்தகைய பண்டிகைகளைப் பெருமகிழ்வுடன் கொண்டாட இயலாத அவலம் உள்ளது. எனினும், தமிழ்ப் பாரம்பரியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுவது நமது கடமைகளுள் ஒன்றாகும்.

தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளிலேயே பொங்கல் பெருவிழா மட்டும்தான், பிற வகையிலான கலாச்சாரக் கலப்போ, ஆதிக்கமோ இல்லாத தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதாவது, இவ்விழா சாதி- மத அடையாளங்கள் இல்லாமல் இயற்கையைப் போற்றுகிற; உழைப்பை மதிக்கிற; மூத்தோரை வணங்குகிற; பெண்மையைச் சிறப்பிக்கிற ஒரு மகத்தான திருவிழாவாகும். குறிப்பாக, மதச்சார்பின்மைக்குச் சான்றாக விளங்கும் ஒரு மாபெரும் மக்கள் விழாவாகும்.

தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் ஊடுருவி மெல்ல மெல்ல அவற்றைச் சிதைக்கும் சதிச்செயல்களில் சனாதன சக்திகள் தொடர்ந்து ஈடுபட்டுவருவதை இச்சூழலில் தமிழினம் உணர்ந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, திருவள்ளுவரையும் பாரதியையும் அவர்கள் கையிலெடுக்க முனைவது அத்தகைய உள்நோக்கத்துடன்தான் என்பதை நாம் உணரத் தவறினால், காலப்போக்கில் நமது பெருமைக்குரிய பொங்கல் விழாவையும் மதம் சார்ந்த ஒரு பண்டிகையாக மாற்றிவிடுவார்கள்.

நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டுவரும் பொங்கல் பெருவிழாவின் மூன்றாம் நாள் விழாவில் நாம் முதன்மைப்படுத்தும் ஏருழும் எருதுகளையும், ஏறுதழுவுதல் நிகழ்வின்போது துள்ளிப் பாயும் (ஜல்லிக்கட்டு) காளைகளையும் பண்டிகையிலேயே இல்லாது செய்து நமது பாரம்பரியக் கூறுகளைச் சிதைத்து விடுவர்.

எனவே, தமிழினத்தின் மதச்சார்பற்ற பெருவிழாவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு பொங்கல் பெருநாளைக் கொண்டாடுவோமென யாவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்:

தமிழகத்திலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும், தமிழர் திருநாளான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை – அறத்தை – முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர் திருநாள் என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே.

1921ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள். யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆராய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள். இந்தத் திருவள்ளளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை 1970-களில், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது.

அதேபோன்று, 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாகக் கடைப்பிடிக்க முடிவெடுத்தார்கள்.

அதன்படி, சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனிதநேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மகிழ்வோடு இன்று கொண்டாடி வருகின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அமைந்துள்ளது.

முக்கியமாக, தமிழர்களின் உணர்வுகளையும், ஜனநாயகக் கோரிக்கைகளையும் புரிந்து, அதனை நிறைவேற்றுவதோடு, சமூக நீதியை நிலைநாட்டும் நல்லரசு தமிழகத்தில் அமைந்துள்ளது.

திமுக தலைமையிலான அரசில் பங்கு வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, பல்வேறு சிறப்பு திட்டங்களைப் பெற வலியுறுத்தவதோடு, விவசாயிகளுக்கு அரணாக நிற்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x