

சென்னை: குளிர்காலமாக இருப்பதால் போகி பண்டிகையையொட்டி எரிக்கப்பட்ட பழைய பொருள்களில் இருந்து எழுந்த புகை மேகங்களில் எளிதாக கரையாததால், நச்சுப்புகையாக மாறியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளன்று, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்காலத்தில் இந்த பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன. இதுபோன்ற நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்குறிப்பிட்ட நச்சு கலந்த பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு போகியன்று சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக, விமானங்கள் திருப்பிவிடப்பட்டும், ரத்து செய்யப்பட்டும், விமானப் போக்குவரத்து தாமதமானதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அந்த ஆண்டு சுமார் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 73 விமானப் புறப்பாடுகளும், வந்து சேர வேண்டிய 45 விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டு போகி பண்டிகையின் போது, சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக, புகை மூட்டத்தின் அளவு குறைந்து, வெகு சில விமான சேவைகளே பாதிக்கப்பட்டதாக சென்னை விமான நிலையத்தின் பெருநிறுவன தகவல் தொடர்பு துறை தெரிவித்திருந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஜனவரி 12-ம் தேதி காலை 8 மணி முதல் ஜனவரி 13-ம் தேதி காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாய்ப்புகளில் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம்/கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது. காற்றில் கலந்துள்ள (PM2.5 நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 52 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 102 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட தர அளவு 60 மைக்ரோகிராம்/கனமீட்டர் ஆகும். மேலும் காற்றில் கலந்துள்ள PM10 நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 103 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் 256 மைக்ரோகிராம்/கனமீட்டர் வரை இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட PM10 தர அளவு 100 மைக்ரோகிராம்/கனமீட்டர். காற்று தர குறியீடை பொருத்தவரையில் குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 113 ஆகவும் (மிதமாகவும்), அதிகபட்சமாக அம்பத்தூரில் 241 (மோசமானதாகவும்) பதிவாகியிருந்தது. இந்த அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்றின் தர குறியீட்டு அளவு குறைந்து காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை சென்னையில் போகி பண்டிகையை ஒட்டி குறைவான அளவில்தான் புகைமூட்டம் காணப்பட்டன. எனினும், காற்றில் கலந்த நச்சுத்துகளின் அளவு கவலைக்குரியதாகவே இருந்தது.
சென்னையில் இன்று அனுமதிக்கபப்ட்ட அளவு 60 மைக்ரோகிராம்/கனமீட்டர் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி, மணலி - 166.59, மணலி கிராமம் - 269.46, அரும்பாக்கம் - 281, ஆலந்தூர் - 193.5, கொடுங்கையூர் - 58, ராயபுரம் - 19, வேளச்சேரி - 13.31,பெருங்குடி - 31 என்ற அளவிலும் காற்றில் நுண்துகள்களின் அளவு பதிவாகியிருந்தன.
இதுகுறித்து பேசிய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ராஜன், குளிர்காலமாக இருப்பதால் போகி பண்டிகையையொட்டி எரிக்கப்பட்ட பழைய பொருள்களில் இருந்து எழுந்த புகை மேகங்களில் எளிதாக கரையாததால், நச்சுப்புகையாக மாறியிருப்பது கவலைக்குரியது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்களிடம் இதுதொடர்பான எச்சரிக்கை அதிகம் தேவைப்படுகிறது” என தெரிவித்தார்.