

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மத்திய அரசு அனுமதித்துள்ள 50 மருத்துவ இடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் மையத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில், முன்களப் பணியாளர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மருத்துவப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்கவும், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சரிடம் தமிழ்நாடு முதல்வர் மனுவை வழங்கியுள்ளார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி நிறுத்தப்படாது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் 61 இடங்களில் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மத்திய அரசு அனுமதித்துள்ள 50 மருத்துவ இடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள்.
பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது. தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இதுவரை 60 ஆயிரத்து 51 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுள்ள 75% சதவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பது என்பது முன்னர் நடந்து வந்தது, தற்போது அவை குறைந்துள்ளது. இது மக்களின் கலாச்சாரம் என்பதால் அவற்றை மக்கள் மாற்றிக்கொள்ள தாமதமாகும்.
தமிழகத்தில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட 11 கல்லூரிகள் மட்டுமே மத்திய-மாநில அரசுகள் நிதி பங்களிப்பில் கட்டப்பட்டவை. இதற்கு முன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 26 மருத்துவக் கல்லூரிகளும் மாநில அரசின் பங்களிப்பில் கட்டப்பட்டவை” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, கிங்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணி ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் அமைச்சர் சமத்துவப் பொங்கல் விழாவினை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தணிகாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் நிதி திரட்டி 7 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி பயில உதவியாக கைபேசிகளை வாங்கி அமைச்சரிடம் வழங்கினர். கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காக புதிய வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.