Published : 13 Jan 2022 02:26 PM
Last Updated : 13 Jan 2022 02:26 PM

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை : கரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த, பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"12-01-2022 நாளைய நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,934 என்றிருக்கையில், சென்னை மாவட்டத்தில் மட்டும் 7,372 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் போன்ற நிலையான செயல்பாட்டு முறைகளை அரசு நிர்வாகம் மேற்கொள்வதில்லை என்றும், கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் நீண்ட காலதாமதமாகிறது என்றும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 39,637 தெருக்களில், 5,000க்கும் மேற்பட்ட தெருக்களில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். தினசரி அரசு வெளியிடும் தகவலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனாத் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில், நிலையான செயல்பாட்டு முறைகளின்படி எந்தெந்த தெருக்களில் எல்லாம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்களோ அந்தந்த தெருக்களில் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதும், இதுதவிர பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளின் வாயில்களில் பிளீச்சிங் பவுடர் போடுவதும், தண்ணீர் தேங்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதும், கபசுர குடிநீர் அளிப்பதும், மாத்திரைகள் வழங்குவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இது மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இது நோய்த் தொற்றை குறைக்க ஓரளவுக்கு உதவியது.

ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்ற சூழ்நிலையில், கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகள் எங்கும் நடைபெறவில்லை என்ற புகார்கள் மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளன. 2020ம் ஆண்டில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இருந்தாலும், கிருமி நாசினி தெளிக்கும் பணியும், பிளீச்சிங் பவுடர் போடும் பணியும் நடைபெற்றன.

இப்பொழுது கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிற நிலையில், கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக்கான முடிவுகள் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில், கரோனா தொற்று இருக்காது என்ற எண்ணத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்கள் அனைவரும் தனித்து இருக்காத நிலையில், முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும்பட்சத்தில், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்று உருவாக வாய்ப்புள்ளது.

இது கரோனா தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும். அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகள் சில மணி நேரங்களில் முடிவுகளை தெரிவிக்கின்றன. முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுவது மட்டுமல்லாமல், கரோனா பாதிக்கப்படாதவர்களுக்கு அதற்கான சான்றிதழ் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அரசு விழிப்புடன் இருந்து கிருமி நாசினி தெளிப்பது,

பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா பரிசோதனை முடிவுகளை உடன் அறிவிக்க வேண்டுமென்றும், தேவைப்படுவோருக்கு கரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கரோனாவின் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு அதன் முடிவுகளை விரைந்து வழங்கவும், தேவைப்படுவோருக்கு சான்றிதழ் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x