

சென்னை: 2021-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, விருதாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காகப் பாடுபடுவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை" வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கன சமூகநீதிக்கான "தந்தை பெரியார் விருது" திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ஆம் ஆண்டிற்கான "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இவ்விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு லட்சம் ரூபாய் என்பதை இவ்வாண்டு முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்விருதுகள், விருதுத் தொகையுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். வருகிற 15-01-2022 சனிக்கிழமை திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்குவார்.
சமூக நீதிக்கான "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள க.திருநாவுக்கரசு "திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக்களஞ்சியம்" என தமிழ்ச் சமூகத்தால் போற்றப்படுபவர்.திராவிட இயக்க வரலாறான "நீதிக்கட்சி வரலாறு" என்னும் நூலை, அது தொடங்கப்பட்ட 1916 முதல் 1944 இல் "திராவிடர் கழகம்" எனப் பெயர் மாற்றம் பெற்றது வரை இரண்டு தொகுதிகளாகப் படைத்துள்ளார். மேலும், திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக்கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதி தமிழ்ச்சான்றோர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துப்பணியைப் போற்றிப் பாராட்டும் வகையில் கடந்த 2006-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் திருக்கரங்களால் இவருக்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
"டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துரு, தன்னுடைய பணிக்காலத்தில் 96,000 வழக்குகளுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தவர். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை வழக்காடும் வழக்கறிஞராகப் பணியாற்றி ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலாய் உயர்நீதிமன்றத்தில் ஒலித்து, மாபெரும் சாதனை படைத்தவர். ஜூலை 31, 2006-ம் ஆண்டு மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2009-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 9-ம் நாளன்று நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சாதிய வேறுபாடுகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிரான இவரது தீர்ப்புகளால் மக்களிடையே மிகுந்த நன்மதிப்பை பெற்றார். "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்", என் வாழ்க்கை கவனி, தமிழ்நாட்டில் ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகும்போது, ஆகிய நூல்களை எழுதியுள்ள இவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து, விளிம்பு நிலை மக்களுடன் வாழ்ந்து, தமிழ்ச் சமூகம் மற்றும் அதன் பண்பாட்டின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.