

சென்னை: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கரோனா எங்கு கரோனா சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று 7.3.2020 அன்று தமிழகத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டபோது, அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது; எந்த மருந்துகளைக் கொடுப்பது; சிகிச்சை முறை மற்றும் நோயினை கண்டறியும் ஆய்வக வசதி போன்ற எந்தவிதமான விபரமும் தமிழகத்தில் இல்லை. அப்போது, தமிழகத்தில் ஆட்சி புரிந்த அதிமுக அரசுக்கு தெரிந்த ஒரே சிகிச்சை முறை “விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயேயிரு” மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாகக் கழுவுதல் ஆகியவைகள்தான்.
அடுத்து, வீடு வீடாக காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று களப் பணிகளை மேற்கொண்டு, பிறகு அனைவருக்கும் RT-PCR பரிசோதனையை மேற்கொண்டது. அடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நானே நேரில் சென்று நோய்த் தொற்றை தடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகங்கள் கையாளும் முறைகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். நாடு தழுவிய ஆய்வின்போது, நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவிகிதம், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம் என்று பிரதமர் பாராட்டினார்.
இவ்வாறு, அதிமுக அரசு ஒரே சீரான முறையில், ஊரடங்கு, நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் கடுமையான கட்டுப்பாடு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என பல நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக, சட்டமன்றப் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தமிழகத்தில் நோய்த் தொற்று கட்டுக்குள் இருந்தது. தமிழக மக்கள் இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்தே நோய்த் தொற்று அதிகமாவதும், குறைவதும் என்று மாறி மாறி இருந்தது. மூன்றாம் அலை மிக அதிக அளவில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதை இந்த திமுக அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், கடந்த 10 நாட்களாக தமிழகம் மூன்றாம் அலையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 31.12.2021 அன்று நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,155. இது, நேற்றைய (12.1.2022) நிலவரப்படி 17,934-ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 11.1.2022 அன்று வெளியிட்ட அறிக்கையில், மிதமான நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் ஆக்சிஜன் செரிவு 92க்கு மேல் உள்ளவர்கள், அவரவர் வீடுகளிலேயே 6 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசின் அறிவிப்பை மீறி, நோய்த் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மற்றொரு பேட்டியில் பேசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக அரசு, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுவந்து அவர்கள் முழுவதுமாக குணமாகிவிட்டனர் என்பதை உறுதி செய்த பின்பு தான் அவர்களை டிஸ்சார்ஜ் செய்தது. ஆனால், தற்போது உள்ள திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சரோ, நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 85 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். ஆனால் அன்று மாலை, அவருடைய சுகாதாரத் துறையின் அறிக்கையில் சுமார் 800 நபர்கள்தான் ஒமைக்ரான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த பேட்டி உண்மையா? அல்லது சுகாதாரத் துறையின் அறிக்கை உண்மையா? நோய்த் தொற்று பாதித்தவர்கள் உண்மையிலேயே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா? அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா? வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எங்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் ஒமைக்ரான் நோய்த் தொற்று பாதிப்பை உறுதி செய்யும் ஆய்வக வசதி மத்திய அரசிடம்தான் உள்ளது. எனவே, தற்போது ஒமைக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். கரோனா நோய்த் தொற்று முதன் முதலில் பரவிய மார்ச் 2020-ல், தமிழ் நாட்டில் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் மட்டுமே ஆய்வக வசதி இருந்தது. ஆனால், ஒவ்வொரு மனித உயிர்களும் அப்போதைய அதிமுக அரசுக்கு முக்கியமானவை. எனவே, அரசின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆய்வகங்களை தொடங்குவதில் நாங்கள் உறுதியான முடிவெடுத்து செயல்பட்டோம். அதன்படி, 2021 ஏப்ரல் கடைசியில், தமிழகத்தில் 265 பரிசோதனை மையங்கள் செயல்பட்டன.
எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒமைக்ரான் பரிசோதனை மையங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். எந்தவித நோய்த் தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டிய அடிப்படை கடமை இந்த அரசுக்கு உண்டு. மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவை காட்டும் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் வழங்கப்படுவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும் உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த பல்ஸ் ஆக்சி மீட்டர் அரசால் வழங்கப்படவில்லை என்றே செய்திகள் கூறுகின்றன. பல்ஸ் ஆக்சி மீட்டர் இல்லாதவர்கள், தங்களது உடலில் ஆக்சிஜன் அளவு 92க்கும் கீழே சென்று விட்டதை எப்படி அறிவார்கள்? கடந்த ஆண்டு மத்தியில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்சிஜன் செரிவு குறைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல் இறக்க நேரிட்டதை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பின.
கரோனோ நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் இச்சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்றும்; ஒமைக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை என்றும்; ஆக்சிஜன் அளவு 92க்குக் கீழ் சென்றால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடக்கூடாது. பேட்டி அளிக்கும்போது, தான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மனதில் வைத்து, தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தான் தான் பொறுப்பு என்ற உணர்வுடன் சுகாதாரத் துறை அமைச்சர் நடந்துகொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தக்கூடாது. அதே சமயம், நோய்த் தொற்றால் ஏற்படும் உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் உள்ளது உள்ளபடியே தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு.
ஒவ்வொரு மனித உயிரும் அரசுக்கு முக்கியம் என்ற உன்னத நோக்கத்துடன் அதிமுக அரசு, எப்படி கரோனா நோய்த் தொற்றைக் கையாண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு கட்டுக்குள் வைத்திருந்ததோ, அதே போல், நோய்த் தொற்றை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு என்பதை நான் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே, தமிழக அரசு வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்துவதே தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.