Published : 13 Jan 2022 01:20 PM
Last Updated : 13 Jan 2022 01:20 PM

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்: தமிழக அரசு அதிரடி

கோப்புப் படம்

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி, அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொடர்ந்து இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 521 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒருநாளில் 17,934 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சென்னையில் 7,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,039 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் 37,953 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 21,735 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9302 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காற்று மூலம் பரவக் கூடியது என்பதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது செப்டம்பர் 2021-ல் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்ததை விட கரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செப்டம்பரில் வெளியான ரூ.200 அபராதம் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ''பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிடப்படுகிறது; முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடியிருக்கும்படி இருக்க வேண்டும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x