

சென்னை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு வரும் அழைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
கரோனா கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட அவர், தமிழகத்திலுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் இருப்பு குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.