

சென்னை:தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோயில்களின் வளர்ச்சி, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதருதல், கோயில்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கலையொட்டி 2 இணை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஆண்டுவருமானம் கிடைக்கும் கோயில்களில் பணியாற்றி வரும் நிரந்தரப்பணியாளர்களுக்கான அகவிலைப்படி கடந்த 1-ம் தேதி முதல் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையார்களுக்கு ரூ.2,500, காவல் பணியாளர் களுக்கு ரூ.2,200, துப்புரவுப்பணியாளர்களுக்கு ரூ.1,400 மாத ஊதியம் உயரும். இதன் மூலம் 10 ஆயிரம் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால் ஆண்டுக்கு ரூ.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
அரசு ஊழியர்களுக்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு ரூ.1.5 கோடி கூடுதல்செலவு ஏற்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.