

சென்னை: பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாக சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால், அரசு பேருந்துகள், ரயில்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பொதுமக்களின் வசதிக்காக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் இதர பெரு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 10 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருந்த விரைவு ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு கூட்டம் அதிகமாக இருந்தது. இதுவரை அரசு பேருந்துகளில் சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகளும், கடந்த 2 நாட்களில் ரயில்களில் ஒரு லட்சம் பேர் பயணித்ததாக ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதுதவிர, ஆம்னி பேருந்துகள், கார்கள் மூலம் பலர் நேற்று சொந்த ஊர் சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.