

கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கோவையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும் காளையுடன் உரிமையாளர் ஒருவர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள உதவியாளர் மட்டுமே வர வேண்டும். அப்போது,இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கு மிகாமல், இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், பார்வையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.