Published : 21 Apr 2016 08:32 AM
Last Updated : 21 Apr 2016 08:32 AM

தீவுத்திடலில் அனுமதியின்றி பேனர்கள் வைத்த அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு: உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் லக்கானி பதில் மனு

தீவுத்திடலில் நடந்த அதிமுக கூட்டத்தின்போது பேனர்கள் வைக்கப்பட்டது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்; இதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘சென்னை தீவுத்திடலில் கடந்த 9-ம் தேதி அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். இதற்காக தீவுத்திடல் மட்டுமின்றி, வழிநெடுகிலும் சாலையோரங்களில் மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதம் பேனர்களை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கடந்த ஏப்ரல் 8-ம் தேதியே தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகைப்பட ஆதாரங்களுடன் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் புகார் மனு அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. எனவே நான் அனுப்பிய புகார் மனுவை பரிசீலித்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘கடந்த 9-ம் தேதி தீவுத்திடலில் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வழிநெடுகிலும் சாலையோரங்களில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கவில்லை.

இது தொடர்பாக புகார் வந்ததும் காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் முதல்நாள் இரவே உடனடியாக அகற்றப்பட்டன. ஆனால் தீவுத்திடல் அருகில் வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக கோட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தின் முழுகட்டுப்பாட்டுக்குள் போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கொண்டுவரப் படுவார்கள்’’ என அதில் தெரிவித்து இருந்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘அதிமுகவினர் வைத்த பேனர்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டை போலீஸார், அந்த வழக்கை எவ்வித தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக விசாரிக்க வேண்டும். இதுபோல தமிழகம் முழுவதும் யாராவது சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x