

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதில் ஒரு மைல் கல்லாக, இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில்தான் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டிலேயே12 சதவீத மருத்துவ இடங்கள் இங்கு உள்ளன. ஒவ்வொரு கிராம மக்களுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்துக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே நீட் தேர்வுக்கு திமுக அரசு விலக்கு கேட்கிறது.தமிழகத்தில் மருத்துவ இடங்கள் 6,000-ல் இருந்து, 10,000 ஆக உயர்ந்துள்ளன. இதில், 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு செல்கின்றன.புதிதாக உருவான மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார். தமிழக பாஜக அதற்கான முயற்சிகளை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.