

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு காரணங் களால் பயிர்கடன் தள்ளுபடி செய்யாத 51,017 விவசாயிகளுக்கு பயிர்க் கடனை முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தள்ளுபடி செய்துள்ளார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கியும், மீண்டும்பயிர்க் கடன் வழங்க ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம் முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசும்போது, “சேலம், நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு பல்வேறு காரணங்களால் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்தது. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றதும், தனி கவனம் செலுத்தி அவர் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்” என்றார்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நிலையான மாத ஊதியம் இன்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோருக்கு அமைச்சர் கே.என் நேரு பொங்கல் பரிசுத் தொகுப்பாக புத்தாடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் விஜயசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.