

சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி திருக்கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இது குறித்து காவல் ஆணையர் விடுத்த அறிவுறுத்தல்கள் வருமாறு:
பொது மக்களின் பாதுகாப்புக்காகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் செய்யப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன்று (13-ம் தேதி) காலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
இன்று காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யு டியுப் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலைய துறை தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. சமூக இடைவெளி கடைப்பிடித்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலன் கருதி தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பும் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்பும்தான் கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். 14.01.2022 முதல் 18.01.2022 வரை பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை . இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பும் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்பும் கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.