Published : 13 Jan 2022 07:17 AM
Last Updated : 13 Jan 2022 07:17 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள 201 அரசு வழக்கறிஞர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்கள் என்றும், இதன்மூலம் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி அகில இந்திய எஸ்சி, எஸ்டி கூட்டமைப்புகளின் மகா சம்மேளனம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கருப்பையா கூறியதாவது:
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் பெற்ற சமூகநீதி, உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இல்லாமல் போய்விட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நியமிக்கப்பட்டுள்ள 201 அரசு வழக்கறிஞர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது. 45 நாட்களுக்கு மேல் ஒப்பந்த அல்லது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டால் இடஒதுக்கீட்டு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுபோல அரசு பொது பணத்தில் இருந்து ஊதியம் வழங்கினால் தெரிவு முறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதை இரண்டையும் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
201 அரசு வழக்கறிஞர்களை நியமிக்க மொத்தம் 2,485 விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக கூறும் தமிழக அரசு இதற்காக எந்தவொரு தேர்வுக்குழுவோ, எழுத்துத்தேர்வோ, நேர்முகத்தேர்வோ நடத்தவில்லை.
அரசு தலைமை வழக்கறிஞரின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதால் நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களின் சாதி விவரம் தெரியவில்லை எனவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு வழக்கறிஞர்களின் விண்ணப்பத்தில் நீங்கள் என்ன சாதி என்ற விவரம் கோரப்பட்டள்ளது. இந்த நடைமுறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட நபர்கள் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குக்கூட தொடர முடியும்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் சமூக நீதியைப் பின்பற்றும் வகையில் இடஒதுக்கீட்டு விதிகளின்படி கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடஒதுக்கீடு விதிகள் தற்போது அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் பின்பற்றப்படாதது வேதனைக்குரியது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT