Published : 13 Jan 2022 07:13 AM
Last Updated : 13 Jan 2022 07:13 AM

உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட பொங்கல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகியிடம் பிக்பாக்கெட்: ரூ.1 லட்சம் திருடியவரை போலீஸ் தேடுகிறது

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்ஏல்ஏ அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட பொங்கல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகம் ஐஸ்அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ளது.

இந்த அலுவலகத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.

பரிசு பொருட்கள் விநியோகத்தை உதயநிதி ஸ்டாலின், 50 நிர்வாகிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேப்பாக்கம் தொகுதி வட்ட செயலாளர் வெங்கடேசன் நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக ரூ.1 லட்ச ரூபாயை பாக்கெட்டில் வைத்திருந்தார்.

வீடியோ பதிவு

அப்போது நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வெங்கடேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடி தப்பியுள்ளார். இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கட்டமாக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில், முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்து வந்த மர்ம நபர் பணத்தை திருடி நழுவி செல்வது தெரியவந்துள்ளது. அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஐஸ்அவுஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x