Published : 13 Jan 2022 07:56 AM
Last Updated : 13 Jan 2022 07:56 AM

செங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாரதி அண்ணா தேர்வு

செங்கல்பட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பார்வைத்திறன் முற்றிலும் இல்லாத மாற்றுத்திறனாளியான பா.பாரதி அண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட 23-வது மாநாடு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்றது.

இதில் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணராஜ், கே.சேஷாத்திரி, ஜி.மோகனன், மாவட்டச் செயலாளர் இ.சங்கர், கே.வேலன், வி.கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும். செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியில் கூடுதல் பணியாளர்களைச் சேர்க்க வேண்டும். தமிழக அரசு தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்ற வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்.

50% முன்னுரிமை

செங்கல்பட்டு எச்பிஎல் தடுப்பூசி நிறுவனத்தை உடனடியாக ஒன்றிய அரசு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்பாக்கம் அணுசக்தித் துறையில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதுடன் சுற்றுவட்டார கிராம இளைஞர்களுக்கு 50 விழுக்காடு முன்னுரிமை வழங்கவேண்டும். பெண்கள், பெண்குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தரம் உயர்த்துவதுடன் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாரதலைமை மருத்துவமனைகள்,ஆரம்பச் சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையைத் தடுக்க வேண்டும். செங்கல்பட்டு கிராமப்புற மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

கட்சியின் புதிய மாவட்டச் செயலாளராக பார்வைத் திறன்முற்றிலும் இல்லாத மாற்றுத்திறனாளியான ப.பாரதி அண்ணா தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.கண்ணன், இ.சங்கர், கே.வாசுதேவன், கே.சேஷாத்திரி, வி.அரிகிருஷ்ணன், வி.தமிழரசி, க.புருசோத்தமன், க.பகத்சிங்தாஸ் ஆகியோர் உள்ளடக்கிய 27 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x