Published : 27 Apr 2016 08:24 AM
Last Updated : 27 Apr 2016 08:24 AM

பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. பணப் பட்டுவாடா குறித்து தகவல் அளிக்க கிராமங்கள்தோறும் இளைஞர் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை தேர்தல் ஆணை யம் உன்னிப்பாக கவனித்து வரு கிறது. விதிமீறல்களை தடுக்க அவ்வப்போது தேவையான அறி வுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பிடிபடும் பணம் தொடர்பாக விசாரித்த அவர், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, வருமான வரி புலனாய்வுப் பிரிவினர் தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் புகார்கள் தொடர் பான தகவல்கள் உரிய துறைக்கு அளிக்கப்படுவது முழுமையாக தானியங்கி முறைக்கு மாற்றப் பட்டுள்ளது. புகார் எண் ‘1950’ அல்லது வாட்ஸ் அப் எண் 9444123456 ஆகியவற்றுக்கு ஒருவர் தகவல் அளித்தால், அது தொடர்பான குறுஞ்செய்தி முதல்கட்டமாக, பறக்கும் படையினர் மற்றும் தொகுதிக்கான பார்வையாளருக்கு செல்லும்.

அதன்பின், அந்த தகவல் உறுதி செய்யப்பட்டு வருமானவரி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப் படும். வருமான வரித்துறையினர் சோதனைக்கான ஆணை பெற்று, புகார் வந்த இடத்தில் ஆய்வு செய்கின்றனர்.

கோவையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் அடிப்படையில் நகைக்கடையில் வருமானவரி சிறப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2.5 கிலோ தங்கம் பிடிபட்டது. அரசியல் கட்சியினர் அளித்த ஆர்டர் அடிப்படையில், மூக்குத்தி செய்வதற்காக தங்கம் வாங்கியிருப்பது தெரியவந்துள் ளது. இதேபோல மதுரையில் ரூ.20 லட்சம் சிக்கியது.

கோவையில் அதிமுக கவுன் சிலர் வீட்டில் பணம் பதுக்கப் பட்டிருப்பதாக நேற்று (25-ம் தேதி) வந்த தகவல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அங்கு எதுவும் சிக்கவில்லை. பறக் கும் படையினரின் சோதனையில், புதுக்கோட்டையில் ரூ.1 கோடியே 61 லட்சம் சிக்கியது. ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கும் பணம் என கூறப்பட்டதால் விசாரணை நடந்து வருகிறது. பெரம்பலூரில் ரூ.70 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் இதுவரை 861 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் குழுக்கள்

ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பணம் அளிக்கப்பட்டால் தகவல் தெரிவிக்கவும் கிராமங்கள்தோறும் இளைஞர் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் 10 முதல் 15 பேர் வரை இருப்பர். இதில் அங்கம் வகிப்போர் 30 வயதுக்குள் உள்ளவராகவும், படித்தவராகவும், கைபேசி வைத்திருப்பவராகவும், கட்சி சார்பற்றவராகவும் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதுவரை 21,300 குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. இக்குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் தற்போது, தேர்தல் நடத்தும் அதிகாரி, தொகுதி பார்வையாள ருக்கும் தகவல்கள் அளித்து வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுவதும் ரூ.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பணப் பட்டுவாடா, பதுக்கல் தொடர்பாக தகவல் அளிக்கும் போது, சரியான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருமான வரித்துறை சோதனை ஏன்?

5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் தமிழகத்தில் மட்டும்தான் முதல்முறையாக, தேர்தல் தொடர்பான சோதனை, வருமான வரி புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி கூறும்போது, ‘‘பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனை நடத்தும்போது பணம் பிடிபட்டால், அதற்கான அபராதம் ரூ.500 மட்டுமே. ஆவணங்கள் அளித்தாலோ, நீதிமன்ற உத்தரவுடன் வந்தாலோ, பணத்தை திருப்பியளிக்க வேண்டும். இதனால், கோடிக்கணக்கில் சிக்கும் பணம்கூட தப்பிவிடும். இம்முறை, வருமான வரித்துறையினர் களமிறங்கியுள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக தொடர் விசாரணை நடக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x