Published : 13 Jan 2022 11:26 AM
Last Updated : 13 Jan 2022 11:26 AM

சிவகங்கை அருகே வீடு இடிந்த நிலையில் சேலையால் மறைப்பு ஏற்படுத்தி வசிக்கும் பெண்

சிவகங்கை அருகே மழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததால், கணவனை இழந்த பெண் வீட்டைச் சுற்றி சேலையை கட்டி சிரமத்துடன் வசித்து வருகிறார்.

சிவகங்கை அருகே மம்மரங்காப்பட்டியைச் சேர்ந்த சித்திரன் மனைவி பழனியம்மாள் (50). இவரது கணவர் இறந்த நிலையில், கூலி வேலை பார்த்து மகன், மகளை காப்பாற்றி வந்தார். மகள் திருமணமாகி சென்றுவிட்ட நிலயைில், தனது மகனுடன் பழனியம்மாள் வசித்து வருகிறார். மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் கட்டுவதற்கு பணம் இல்லாததால் வீட்டை சுற்றிலும் சேலைகளை கட்டி பழனியம்மாளும், அவரது மகனும் வசித்து வருகின்றனர். தற்போது குளிர் காலம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பழனியம்மாள் கூறியதாவது: வீட்டின் சுவர் இடிந்தபோது வருவாய்த் துறை அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வீட்டை சீரமைத்து தர நிதி உதவி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்நிலையில் வீட்டை சீரமைக்க வேறு திட்டத்தில் பணம் பெற்று தருவதாகக் கூறிய அதிகாரிகள், ஏற்கெனவே கொடுத்த ரூ.2 ஆயிரத்தை திருப்பிக் கேட்கின்றனர். நான் அந்த பணத்தை செலவழித்து விட்டேன். அதனால் திருப்பி தர முடியாமல் சிரமப்படுகின்றனர் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x