

தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் விவசாயியும், மீன் வியாபாரியும் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சாணான்வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (55). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் (27) என்பவரும் கதிர் அறுக்கும் இயந்திரத்துக்கு பெட்ரோல் வாங்க ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கைகாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அதேபோல் தேவகோட்டையில் மீன் கடை நடத்தி வந்த சரவணன் (45), தொண்டியில் மீன்களை வாங்கி கொண்டு மினி வேனில் தேவகோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
புளியால் அருகே வந்தபோது மினி வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த முருகன், மினி வேனை ஓட்டி வந்த சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த கண்ணதாசனை சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா விசாரித்து வருகின்றனர்.