

பொங்கலையொட்டி புதுமண தம்பதியருக்கு பெற்றோர் வீடுகளில் இருந்து சீர்வரிசைகள் வழங்கும் பாரம்பரியம் தொடர்கிறது. சீர் வரிசை பொருட்களை பெரிய அள விலான மண்பானைகளில் வைத்து வழங்குகின்றனர். இதற்காக பிரத்யேகமாக சீர்வரிசை பானைகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த பானைகளில் தெய்வங்களின் உருவங்கள், தலைவர்களின் புகைப்படங்கள், இயற்கை காட்சிகள், திருவள்ளுவர் போன்ற தமிழ் புலவர்களின் படங்களை வரைந்து விற்பனை செய்யும் வழக்கம் இருக்கிறது.
இந்த பொங்கல் பண்டிகைக்கும் வண்ண ஓவியங்களுடன் சீர்வரிசை பானைகள் பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பெரிய அளவிலான சீர்வரிசை பானை ஒன்று ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. சிறிய அள விலான பானைகள் ரூ.200 முதல் ரூ.400 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கலன்று வீடுகளில் வண்ணமயமாக கோலமிடப்படும். இதற்காக பாளையங்கோட்டையில் 20 வண்ணங்களில் கோலப்பொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 10 வண்ணம் கொண்ட கோலப்பொடி பாக்கெட்டுகள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி, திருச்செந்தூரி லிருந்து கடல் மணலை மூட்டைக்கு ரூ.350 என்று வாங்கிவந்து, வண்ணங்களை கலந்து கோலப்பொடி தயாரித்து விற்பனை செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சீவலப்பேரி, மணப்படைவீடு, தோணித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகள் பொங்கலையொட்டி விற்பனைக்கு வந்துள்ளன. 25 எண்ணம் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.100-க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் அவித்த 5 கிழக்குகள் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.