

பொள்ளாச்சியில் விடுதியில் இருந்து இரு மாணவிகளைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் இல்லம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டம் 2000 திருத்திய சட்டம் 2006-ன் கீழ் பதிவு பெறாத குழந்தைகள் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நல அதிகாரி ஆனந்தவள்ளி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் நலக் குழும உறுப்பினர்கள், ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடச்சனேந்தல் பொம்மிநகரில் ஆர்.கே. டிரஸ்ட் குழந்தைகள் காப்பகம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின்பேரில், அப்பன்திருப்பதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் முன்னிலையில் அந்த காப்பகத்துக்கு சீல் வைத்தனர். அங்கிருந்த 53 குழந்தைகளையும் மீட்டு மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் அரசு இல்லங்களான பாலமந்திரம் மற்றும் சேவா நிலையத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: திருத்தப்பட்ட இளைஞர் நீதி சட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தைகள் காப்பகத்திலும் இருக்கவேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு குழந்தை தங்குவதற்கு 40 சதுரடி இடம் இருக்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். தங்கும் அறை, குளியல் அறை, சமையல் அறை, பொருள்கள் பாதுகாப்பறை, விளையாடுமிடம் போன்றவை தனித்தனியாக இருக்க வேண்டும். காற்றோட்டமான கட்டிடம், பொழுதுபோக்கு அம்சங்களும் தேவை.
ஆனால், இந்தக் காப்பகத்தில் அப்படி எந்த வசதியும் கிடையாது. கோழிப்பண்ணை போல ஒரே ஒரு ஆஸ்பெஸ்டாஸ் அறைக்குள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்தனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்த மையத்தில் சோதனை நடத்தியபோதே எச்சரித்தோம். உடனே அடிப்படை வசதிகளைச் செய்துவிடுகிறோம் என்றவர்கள் ஓராண்டாக எதுவும் செய்யாததால் நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து மாவட்டம் முழுக்க ஆய்வு நடத்தப்படும் என்றனர்.