

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களை நகருக்கு வெளியில் மாற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
தி.மலை தேரடி வீதியில் உள்ள கடலைக்கடை மூலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பொருட்கள் வாங்க அதிகளவி லான கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தி.மலை திருக்கோவிலூர் சாலை யில் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள காலி இடத்தில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் தேரடி வீதியில் கடலைக்கடை மூலை சந்திப்பில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்த தி.மலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கடைகள் இடமாற்றம் தற்காலிகமானதே என்றும் பொங்கல் பண்டிகையன்று ஒரு நாள் மட்டும் பழைய இடத்தில் காய்கறி வியாபாரம் செய்து கொள்ளலாம் என உறுதி அளித்தனர். இதனையேற்று வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.