

சென்னை: தமிழக காவல் துறையில், 2021-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 2019-ம் ஆண்டு வரையிலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. 2020-ம் ஆண்டை பொறுத்தவரை 11,181 பதவிகளுக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு, காவல்துறை ஆய்வு, மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டியுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, மாநில பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2021-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்தும், 2020-ம் ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், தமிழ்நாடு காவல் சீர்திருத்த சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.