மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை: ஜன 21-ல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

கோவில்பட்டி: பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 21-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் விடுத்துள்ள அறிக்கையில், "ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் பொதுமாறுதல் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 21-ம் தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில முழுவதும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு நடைபெற உள்ளது.

2019ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த ஆட்சியில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு முன்பாகவே மீண்டும் பழைய இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டம், அரசாணை நகல் எரிப்பு போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றதற்காக 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளாகி பதவி உயர்வை இழந்த ஆசிரியர்களுக்கு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் பிரிவு 47 உட்பிரிவு 3-ன்படி உடனடியாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், ஒன்றியங்களின் எல்லைகளை வரையறை செய்தபோது வேறு ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பிற அரசுத் துறைகளின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுபோல் சொந்த ஒன்றியத்துக்கு செல்ல ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும். கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த கல்வியாண்டில் நடைபெறாததால், 2020-2021-ம் கல்வியாண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 1.1.2020 முன்னுரிமையின் படியும், 2021-22ம் கல்வியாண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 1.1.2021 முன்னுரிமையின்படியும் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் உபரிப்பணியிட மாறுதலில் வேறு ஒன்றியங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் சொந்த ஒன்றியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் தேவைப் பணியிடங்களுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மலைச்சுழற்சி மாறுதல் தொடர்பான அரசாணையை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். 1.1.2022 மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு முறையின் கீழ் ஆசிரியர்களின் அன்றாட கற்பித்தல் பணிகளை பாதிக்கும் வகையில் தேவையற்ற பதிவுகள் மேற்கொள்ள நிர்பந்திப்பதையும், அளவுக்கு அதிகமாக பதிவேடுகளை பராமரிக்க உத்தரவிடுவதையும் கல்வித்துறை கைவிட வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நேரடி பயிற்சிகளை கல்வித்துறை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in