Published : 12 Jan 2022 03:30 PM
Last Updated : 12 Jan 2022 03:30 PM

திருவண்ணாமலை சிப்காட் விவகாரம்: போராடும் விவசாயிகளை அரசு தரப்பு அச்சுறுத்துவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

கோப்புப் படம்

சென்னை: விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என மிரட்டுவது முதல்வர் ஸ்டாலினின் நிலைக்கு எதிரானது என்றும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான சிப்காட் வளாகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத பகுதிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராடி வரும் மக்களை அழைத்து பேச்சு நடத்துவதற்கு பதிலாக, அவர்களை அச்சுறுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் 10 இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், பாலியப்பட்டு, ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அஸ்வநாகசுரணை ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் சில வாரங்களுக்கு முன் நில அளவையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு சிப்காட் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்படும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 25 நாட்களாக ஊருக்குள் கருப்புக்கொடி ஏற்றுவது, மறியல், கஞ்சித்தொட்டி அமைத்தல், காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாலியப்பட்டு பகுதியில் அமைக்கப்படவுள்ள சிப்காட் வளாகம் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களும், 500 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளும் கையகப்படுத்தப்படும் என்று அஞ்சப்படுகிறது.

பாலியப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு விவசாயம் தவிர வேறு வாழ்வாதாரங்கள் கிடையாது. பாலியப்பட்டு பகுதியிலுள்ள விளைநிலங்களில் நிலக்கடலை, காய்கறிகள் தொடர்ச்சியாக சாகுபடி செய்யப்படுகின்றன. மலர் வகைகளும் மிக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதனால் அப்பகுதி மக்கள் வறுமையின்றியும், வாழ்வாதார சிக்கல் இன்றியும் வாழ்ந்து வருகின்றனர். சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஈடாக தமிழக அரசு எதை வழங்கினாலும் அது நிலங்களின் மூலம் கிடைக்கும் வாழ்வாதாரத்தை தொடர்ந்து வழங்காது.

கிராமப்பகுதிகளில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகுவதற்கான சிறந்த வழிகளில் சிப்காட் தொழிற்பேட்டைகளும் ஒன்று என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. பல மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தியுள்ளது. அதே நேரத்தில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படும் சிப்காட் வளாகங்கள் பிறரின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக இருக்கக்கூடாது. வேளாண் விளைநிலங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்வாதாரம் வழங்கக் கூடியவை. ஆனால், கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடாக வழங்கப்படும் தொகை அடுத்த சில மாதங்களில் கரைந்து விடும். அதன் பின்னர் பாதிக்கப்படும் குடும்பங்கள் வறுமையில் வாழ நேரிடும்.

சென்னை மற்றும் சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எதிர்த்தார். இப்போதும் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமரிடம் மனு அளித்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியைப் போலவே அத்திட்டத்தை முதல்வரும் எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம், அதனால் உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பர் என்பது தான். அதே காரணம் பாலியப்பட்டு சிப்காட் திட்டத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கும் பொருந்தும்.

முதல்வரின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் தமிழக அரசின் அணுகுமுறை அமைய வேண்டும். ஆனால், விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் உழவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்றும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை சுட்டிக்காட்டியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மிரட்டியுள்ளார். பாலியப்பட்டு பகுதியில், யார் எதிர்த்தாலும் சிப்காட் வளாகத்தை அமைத்தே தீருவோம் என்று அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் கூறியுள்ளனர். இவை முதல்வரின் நிலைக்கு எதிரானவை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட வேண்டும். போராடி வரும் உழவர்களுடன் பேச்சு நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும்; திருவண்ணாமலை மாவட்டத்திற்கான சிப்காட் வளாகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இனி அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டைகள் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஏற்கனவே தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலவங்கிக்கு சொந்தமான இடங்களில் தான் அமைக்கப்படும் என்பதை அரசின் கொள்கை முடிவாக முதல்வர் அறிவிக்க வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x