

மயிலாப்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளை பெறுவதில் தமிழக காங்கிரஸ் தலைவர் களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 33 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வேட்பாளர் களை முடிவு செய்வதில் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த முறை கட்சியில் கோஷ்டித் தலைவர்களுக்கு கோட்டா முறை இருக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். ஆனாலும், நேற்று முன்தினம் வெளியான 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் கோஷ்டித் தலைவர்களுக்கு கோட்டா முறையில் ஒதுக்கீடு செய்திருப்பது தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் மதுரை வடக்கு, முதுகுளத்தூர், காரைக்குடி, முசிறி, கரூர், நாமக்கல் ஆகிய 6 தொகுதிகளை பெற்றுள்ளனர். கே.வி.தங்கபாலு ஓசூர், ஆத்தூர் தொகுதி களிலும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு உதகமண்டலம், சூலூர் தொகுதிகளிலும், ஜெயந்தி நடராஜன் ஜெயங்கொண்டம், திருத்தணி தொகுதிகளிலும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதுதவிர, மணிசங்கர் அய்யர் (பாப நாசம்), மாணிக் தாகூர் (பட்டுக்கோட்டை), முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் (அறந்தாங்கி) ஆகியோரும் தங்கள் தரப்புக்கு தலா ஒரு தொகுதியை பெற்றுவிட்டனர்.
எஞ்சியுள்ள 8 தொகுதிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. மதுரவாயல் தொகு திக்கு இளங்கோவன், டாக்டர் செல்லக் குமார் மோதுகின்றனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியை முன்னாள் அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தனும் டாக்டர் செல்லக் குமாரும் கேட்கின்றனர். மயிலாப்பூர் தொகுதிக்காக இளங்கோவன், சிதம்பரம், அமெரிக்கை நாராயணனும் ஸ்ரீபெரும்பு தூருக்கு இளங்கோவன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ யசோதா, செல்வப் பெருந்தகை ஆகியோரும் மல்லுகட்டு கின்றனர்.
காங்கேயம், சிவகாசி தொகுதிகளை பெறுவதில் சிதம்பரமும் கிள்ளியூருக்கு தங்கபாலுவும் செய்யாறு தொகுதிக்கு கிருஷ்ணசாமியும் இளங்கோவனுடன் மோதுகின்றனர்.
இதனால், இந்த 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க சோனியாவும் ராகுல் காந்தியும் தாங்களே 8 வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.