தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி காணொலியில் இன்று திறந்து வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று திறக்கவுள்ள விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மின்னொளியில் ஜொலிக்கிறது.படம்: இ.மணிகண்டன்
பிரதமர் மோடி இன்று திறக்கவுள்ள விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மின்னொளியில் ஜொலிக்கிறது.படம்: இ.மணிகண்டன்
Updated on
1 min read

மதுரை/ சென்னை: தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்துவைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை இன்று (ஜன.12) பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தமிழகத்துக்கு வந்து திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமர் மோடி இன்று(ஜன.12) மாலை 4 மணிக்கு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம்திறந்து வைக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதன்படி இன்று நடக்கும் இந்தநிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கின்றனர். மேலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஆட்சியர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்துக்குக் கூடுதலாக 1,450 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழாய்வு நிறுவனம்

இதேபோல் சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று திறக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in